Wednesday, November 4, 2015

http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html


பௌத்த சுவட்டைத் தேடி : விக்ரமம்


சோழ நாட்டில் பௌத்தம்
1999இல் பார்த்த ஒரு புத்தர் சிலையை மறுபடியும் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்களைக் காண தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விக்ரமம் செல்வோம், வாருங்கள்.

29 ஜனவரி 1999
விக்ரமம், பள்ளிவிருத்தி, பூதமங்கலம் களப்பணி சென்றபோது விக்ரமம் களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை-மதுக்கூர் பேருந்தில் சென்று, மதுக்கூரிலிருந்து ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு கிமீ தொலைவில் உள்ள விக்ரமம் சென்றேன். விசாரித்து, புத்தர் சிலை இருந்த இடத்திற்குச் சென்று, புத்தரைப் பார்த்தேன். போதிய நேரமின்மையால் உரிய விவரங்களைச் சேகரிக்கமுடியவில்லை.

13 பிப்ரவரி 1999
மறுபடியும் விக்ரமம். தோப்பில் இருந்த புத்தரைக் காண திரு குழந்தைவேலு உதவி செய்தார். இச்சிலையை செட்டியார் சிலை என்றும், சிலை இருக்கும் இடத்தை புத்தடி செட்டிக்கொல்லை என்றும் கூறினார். அவரது தாயார் திருமதி பாக்கியத்தம்மாள் (72) அந்த புத்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்.  "வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கலின்போது தேங்காய் உடைத்து சாம்பிராணி போடுவோம். முதலில் எண்ணெய் எடுக்கும்போது புத்தருக்கு சாத்திவிட்டே பயன்படுத்துவோம்...அவ்வப்போது வேண்டுதல் செய்பவர்கள் தேங்காய் உடைத்து நிவர்த்திக்கடனை நிறைவேற்றுவர். புதிய வேலை ஆரம்பிக்கும்போது இந்த புத்தருக்கு மாலை போட்டுவிட்டு ஆரம்பிப்பர். எனக்கு நல்ல நினைவு. 60 வருடங்களுக்கு முன் இங்கே மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமாக இருந்தது. புத்தருக்கு பூசை செய்தால் மூட்டைப்பூச்சித் தொல்லை குறையும் என்று கூறி பூசை செய்வர். "  

விக்ரமம் புத்தர் (1999)
அவர்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டுத் திரும்பும்போது அருகில் வேறு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டே வந்தேன். அப்போது செங்கங்காடு என்னும் இடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். சென்றுபார்த்தபோது சமணர் என்பதை அறிந்தேன். அந்த சிலையைப் பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். 

7 ஜுலை 2009
விக்ரமத்தைச் சேர்ந்த முனைவர் சிவசுப்பிரமணியன் (உதவிப்பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்) இச்சிலை நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், முன்பிருந்த இடத்திலிருந்து மாறி தற்போது அருகில் மதுக்கூர்-காடந்தங்குடி சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

4 ஜனவரி 2015
நான் பார்த்த புத்தர் சிலைகளைப் பார்க்கவேண்டும் என்று பல நண்பர்களும், அறிஞர்களும் என்னுடன் கூறியுள்ளனர். அவ்வாறான நண்பர்களில் ஒருவர் வலைப்பூவில் அருமையான கட்டுரைகளை எழுதி சாதனை படைத்து வருகின்ற  திரு திரு கரந்தை ஜெயக்குமார்.  வாய்ப்பு கிடைக்கும்போது அழைத்துச்செல்வதாக அவரிடம் கூறியிருந்தேன். அதற்கான வாய்ப்பு ஜனவரி 2015இல் அமைந்தது. தஞ்சாவூருக்கு ஒரு கருத்தரங்கிற்காக வந்த வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்று கூறினார். எனது பௌத்த ஆய்வின்போது கடலூர் மாவட்டத்தில் புத்தர் சிலைகளை இவரது துணையுடன் நான் பார்த்துள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன் நான் முதன்முதலாகப் பார்த்த புத்தர் சிலையை தற்போது மறுபடியும் பார்ப்பதற்காக நாங்கள் மூவரும் கிளம்பினோம்.  அதற்கு முன்பாக புள்ளமங்கை கோயிலுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களைப் பார்க்க அவர் விரும்பவே, இதற்கு முன்னர் நான் பல முறை புள்ளமங்கை கோயிலுக்குச் சென்றோம். புள்ளமங்கையின் கலை அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து விக்ரமம் சென்றோம்.

செல்வதற்கு முன்பாக முனைவர் சிவசுப்பிரமணியம் அவர்களைத் தொடர்பு கொண்டபோது சிலை இருக்கும் இடத்தை உறுதி செய்து, அவரது சகோதரர் திரு குழந்தைவேலு அங்கே இருப்பதாகவும் சிலையைப் பார்க்க உதவுவார் என்றும் கூறியிருந்தார். விக்ரமம் சென்றதும் அவரைத் தொடர்பு கொண்டோம். சிலை இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். தோப்பில் அமைதியாக அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த புத்தரைக் கண்டோம். கடந்த முறை நான் வந்ததை நினைவுகூர்ந்து மறுபடியும் வந்தமைக்குப் பாராட்டினார். வழக்கம்போல் புத்தர் சிலைகளுக்குள்ள கூறுகளைக் கண்டோம்.  அவ்வபோது பலர் வந்து இந்த புத்தர் சிலையைப் பார்த்து செல்வதை அறிந்தோம்.
  

விக்ரமம் புத்தர் (2015)

விக்ரமம் புத்தருடன் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, பா.ஜம்புலிங்கம்  

விக்ரமம் புத்தருடன் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, பா.ஜம்புலிங்கம், திரு குழந்தைவேலு
15 வருடங்களுக்கு முன் பார்த்த புத்தர் சிலையை மறுபடியும் பார்த்த மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

நன்றி
புத்தரைப் பற்றிய செய்தி (1999) கூறிய திருமதி பாக்கியத்தம்மாள்
களப்பணி வந்ததோடு புகைப்படங்கள் எடுத்து உதவிய திரு கரந்தை ஜெயக்குமார்
களப்பணியில் உடன் வந்த திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி 
தகவல் கூறிய முனைவர் சிவசுப்பிரமணியன்
இரு களப்பணியின்போதும் உதவிய திரு குழந்தைவேலு

0 comments:

Post a Comment